இந்த கேள்வி அடிக்கடி
குழப்பத்தில் ஆழ்த்துவதுண்டு
கடவுள் நம்பிக்கை உண்டா
இல்லையா என்று ?
கேட்பவர்களுக்கெல்லாம்
புன்னைகையோ ஓரிரு
வார்த்தைகளில் விடையோ
தருவதுண்டு சில நேரங்களில்
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம்
இல்லையென்றும் , சில நேரங்களில்
நம்பிக்கை இல்லாதவர்களிடம்
உண்டோ என்று சொல்லியோ
விவாவிப்பதும் உண்டு
வென்றாலும் தோற்றாலும்
எது உண்மை என்று என்றும்
எதிலும் ஒரு தீர்மானம் இருந்ததாக
நினைவில்லை !
பஸ்ஸில் பயணம் செய்து
ஹோட்டலில் சாப்பிட்டு
கடை வீதியில் பயணம் செய்து
நெடு வரிசையில் நின்று அப்பா
தோள் மீது ஏறி நின்று
தீபாராதனை வெளிச்சத்தில்
கடவுள் முகம் தெரியும்போதோ
சூடத்தை தொட்டு அம்மா
முகத்தில் இடும்போதே
பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருந்ததாக
ஒரு நினைவு !
மார்கழி மாதத்தில்
பஜனை பாடிக்கொண்டு
கோயிலை சுற்றியதுண்டு
நவராத்திரி பூஜைகளில்
போற்றி போற்றி எனும்
மந்திரம் ஓத
நம்மை தொடர்ந்து எல்லாரும்
ஓத நாம் கடவுளுக்கு
வழிகாட்டியோ என்றதொரு
பருவம் !
அந்த கடவுள் எல்லாம் பொய்
என்று பள்ளியில் புதிதாக
ஒரு கடவுளை காட்டி
புதிய புதிய tune இல்
பாட்டிசைக்க கூடி
ஆடி பாடி வழிபாட்டு
முறை மாற்றி
வாரந்தோறும் தொழுததொன்று !
உடல் நலமில்லாமல்
போகும்பொழுது
தீடிரென குடும்பத்துடன்
பயணித்து மரத்தடியில்
அமர்ந்து எந்தவொரு
ஆர்ப்பாட்டமுமில்லாமல்
பொங்கல் படைத்து
பலா வெட்டி கும்பிட்ட
பொழுது கடவுள் நம்
குடும்பங்களிலும் இருந்திருந்தார்
என்றொரு நம்பிக்கை !
தனியாக கோயிலுக்கு
போக ஆரம்பித்த நேரம்
அலுப்புடன் பயணித்து
கால் கடுக்க நின்று
கை கூப்பிட்டு நின்றாலும்
கருவறைக்கு உள்ளே
அனுமதி இல்லை
புரியாத பாசையில்,
புரோக்கர் வந்த பொழுது
தூரம் ஆரம்பித்தது
கடவுளுக்கும் எனக்கும் !
ஏழ்மை வறுமை
முதுமை
அல்பாய்ஸூ மரணம்
சாதி பேதங்கள்
சுரண்டல்கள்
ஏற்றத்தாழ்வுகள்
இவையெல்லாம்
பார்க்கும்பொழுது
தூரம் இன்னும்
அதிகரித்தது !
படிப்பு
வேலை,
தகுதி
மீறிய வெற்றி
சுயமாக நிற்கும்
சக்தி
இவையெல்லாம்
நாடி வந்த பொழுது
நாம் தான் கடவுளே
என்றதொரு
எண்ணத்தில் கடவுள்
மறைந்தது கூட உண்டு !
ஆனால் மீண்டும்
மீண்டும் தோல்வி வந்து
துவண்டு போகும்போது
ஆகாசமாய்
நட்சத்திரமாய்
கடலலையாய்
வீசும் காற்றாய்
மணக்கும் பூவாய்
நடுநிசி அமைதியாய்
குழந்தையின் புன்னகையாய்
வந்து நிற்கும்பொழுதேல்லாம்
ஓர் குழப்பம் !
மீண்டும் புன்னகையோ
ஓரிரு வார்த்தையோ
அந்த கேள்விக்கு
என்ன பதில் ?
No comments:
Post a Comment